திருச்சந்த விருத்தம் -1/752: பூநிலாய
நின்னை யார் நினைக்க வல்லர்?
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
பூநிலாய வைந்துமாய்ப்
புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச்
சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி
வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை
யார்நினைக்க வல்லரே.
திருமழிசை ஆழ்வார் பெருமாளின் சௌலப்பியத்தை மிகவும் விரும்பிகிறார். ஆனாலும் பெருமாளின் பெருமைகளையும் குணங்களையும் உணர்ந்து அவருக்கு வரும் மலைப்பையும் அவர் நமக்கு சொல்ல தவறுவது இல்லை!
ஆழ்வாரின் பக்தி மட்டும் இல்லை, அவரின் கவித்திறமையும், கலையும் பிரமிக்க வைக்கின்றன. இந்த முதல் பாசுரத்தில் அவர் எண்களை வைத்து எண்ணிலடங்கா புருஷோதமனின் பெருமையை கூறம் விளையாட்டை தொடங்கி வைக்கிறார். அடுத்து வரும் சில பாசுரங்களிலும் இவ்விளையாட்டு தொடரும்!
பொருள்
“பூமியின் ஐந்து குணங்களும், நீரின் நான்கு குணங்களும், தீயின் மூன்று குணங்களும், காற்றின் இரண்டு குணங்களும், ஆகாயவெளிக்கு இருக்கும் ஒரு குணமும் உன் குணங்களின் அம்சங்களே ஆனாலும், அகிலமெங்கும் வியாபித்திருக்கும் உன் கணக்கில் அடங்கா குணங்களை யாரால் நினைத்து கூட பார்க்க முடியும்?” என்னும் பொருள் வர புலவர் பாடுகிறார்.
அது என்ன ஒன்று, இரண்டு, மூன்று...?
ஆகாயத்திற்கு ஆதார குணம், ஒலி. அதை தொடவோ, சுவைக்கவோ, நுகரவோ முடியாது. அதற்கு ஒரு உருவமும் இல்லை.
அதனுள் இயங்கும் காற்றுக்கு, ஒலியுடன் தொடுகை என்ற இரண்டாம் தன்மையும் உண்டு. நெருப்புக்கு ஒலி, தொடுகை, உருவம் என்ற மூன்றும் உள்ளன.
நீருக்கு நெருப்புக்கு உள்ள மூன்று குணங்களும் உள்ளன. அதை தாண்டி, அதற்கு சுவை என்ற நான்காம் இயல்பும் உண்டு.
புவிக்கோ ஓசை, தொடுகை, உருவம், சுவையுடன்கூடி மணம் என்ற இலட்சணமும் உண்டு.
இந்த குணங்களின் வரிசையைதான் திருமழிசை புலவர் சிக்கனமாக குறிப்பிட்டு பெருமாளின் பெருமையை நமக்கு உணர்த்துகிறார்.