திருச்சந்த விருத்தம் 12/763: உலகுதன்னை நீபடைத்தி
நின்னை நினைக்கவல்லார் யார்?
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
உலகுதன்னை நீபடைத்தி
யுள்ளொடுக்கி வைத்தி,மீண்-
டுலகுதன்னு ளேபிறத்தி
யோரிடத்தை யல்லையால்,
உலகுநின்னொ டொன்றிநிற்க
வேறுநிற்றி யாதலால்,
உலகில்நின்னை யுள்ளசூழல்
யாவருள்ள வல்லரே? 12.
பொருள்
“இந்த உலகத்தை நீ படைத்தாய். ஊழிகாலத்தில் உலகத்தை நீ உனக்குள்ளே வயிற்றில் வைத்து காக்கிறாய். உன்னுள் இருக்கும், நீ படைத்த, உலகத்தில் நீயே அவதரித்து காக்கிறாய். நீ பரம் பொருளாய் இருந்தாலும், அவதாரமாய் வந்தாலும், குறையொன்றுமில்லாத உன்னை வகையறுக்க முடியாது. நீயே உலகமென்றாலும், நீ வேறு, இந்த உலகம் வேறு. இவ்வளவு வார்த்தைக்கு மீறிய மாயங்கள் உள்ள உன்னை, இந்த உலகில் உள்ள யாரால் நினைக்க முடியும்?”
விளக்கம்
இந்த பாசுரதில், ஆழ்வார் பெருமாளின் வரையறுக்க முடியாத பூர்ணத்துவத்தை வியக்கிறார்.
உலகுதன்னை நீ படைத்தி: உன்னையே உபாதன காரணமாகவும் நிமித்த காரணமாகவும் வைத்து, நீயே இந்த உலகத்தை படைத்தாய். அவனை படைத்ததால், பிரம்மாவின் படைப்புகளும் உன்னுடையவையே. சாந்தோக்கிய உபனிஷத் கூறுவது: “ப்ரப்பிரம்மம் சங்கல்பித்தது – நான் பல்வகையாக விரிகிறேன்; நான் பிறப்பெடுக்கிறேன்; எங்கும் ஒளிமயமாகட்டும்” (“तदैक्षत बहु स्यां प्रजायेयेति तत्तेजोऽसृजत / tadaikṣata bahu syāṃ prajāyeyeti tattejo'sṛjata”)
உள்ளொடுக்கி வைத்தி: ஊழி காலத்தில் உலகத்தை உன் உந்தியுள் அடக்கி காக்கிறாய்.
மீண்டு உலகு தன்னுளே பிறத்தி: உன்னுடைய சர்வத்துவத்தை மறைத்து, சாதாரணமாக அவதரிக்கிறாய். அண்டத்தையே உன்னுள் வைக்கும் நீ, நீ காக்கும் இன்னொறு வயிற்றில், சம்சாரத்தில் பிறக்கிறாய்.
ஓரிடத்தை அல்லையால்: உன்னை, “இது” என்று ஒரு வகையில் வைக்க முடியாது. நீ ப்ரப்பிரம்மமாக செயல்படும்போதும், நீ படைத்த உலகில் ஒரு அவதாரமாக செயல்படும்போதும் முழுமையாகவே இருக்கிறாய். உனக்கு ஒருபொழுதும் ஒரு குறையுமில்லை.
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி: இந்த உலகம் உன்னுடைய சரீரத்தை சேர்ந்தது. உன்னைப் பிரியாதது. ஆனால், உன் அப்ப்ராக்ருத உருவத்தில் நீ அதனின்று வேறுபட்டு இருக்கிறாய். இங்கே, ஆழ்வார் மறைத்து வைக்கும் செய்தி, பெருமாளை அறியாமல் இருக்கும்போது, அவன் அவர்களுக்கு உள்ளே இருந்து அவர்களை போஷிக்கிறான். அவனை தெரிந்துகொண்ட பிறகு, அவன் தன் திவ்யரூபத்தை காண்பித்து தியானிக்க வைக்கிறான். (நிற்றி = நின்றாய்)
ஆதலால், உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே: இதை, “சூழல் உள்ள நின்னை உலகில் யாவர் உள்ள வல்லரே” என்று மாற்றி அமைத்து படிக்க வேண்டும். “ஆகையால், இவ்வளவு மாயங்கள் உள்ள உன்னை, இந்த உலகில் உள்ள யாரால் நினைக்கக்கூட முடியும்?” என்று ஆழ்வார் வியப்பதுபோல் முடிகிறது பாசுரம்.

