ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
தூய்மையோக மாயினாய்து
ழாயலங்கல் மாலையாய்,
ஆமையாகி யாழ்கடல்து
யின்றவாதி தேவ,நின்
நாமதேய மின்னதென்ன
வல்லமல்ல மாகிலும்,
சாமவேத கீதனாய
சக்ரபாணி யல்லையே? 14
பொருள்
“சம்சார சாகரதிலிருந்து எம்மை விடுவித்து தூய்மைபடுத்துபவன் துளசி மாலை அணிந்த நீயே. அன்று, ஆமை உருவை எடுத்துக்கொண்டு, சமுத்திர மந்தனத்தின் போது ஆமை உருவை எற்று மந்தர மலையைத் தாங்கிய ஆதி தேவனும் நீயே. உன் திவ்ய பெருமைகளை விவரிக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால், நீ அந்த சாமவேதம் கூறும் “சக்கரம் தாங்கியவன்” என்று உணர்ந்ததும், அந்த திறமை யாருக்குமில்லை என்று அமைதியானேன்.”
விளக்கம்
தூய்மை யோகம் ஆயினாய்: சம்சாரிகளை தூய்மைபடுத்தி உய்விப்பவன் நீதான்.
துழாய் அலங்கல் மாலையாய்: துளசி ஆதி பகவனின் குறிப்பாக சொல்லப்படுகிறது. அதை மாலையாய் அணிபவன் பெருமாளே
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவ: அன்று பாற்கடலை தேவர்கள் அமுதத்திற்காக கடைந்தபோது, மத்தாயிருந்த மந்தர மலையைத் தாங்க ஆமையாய் மாறியவன் ஆதி தேவனான நீயே. இங்கு, ஆழ்வார், தேவர்கள் பெருமாளை நாடுவதை விட்டுவிட்டு, அமுதத்தை விரும்புவதை மறைமாக சாடுகிறார்.
நின் நாமதேயம் இன்னதென்ன வல்லம் அல்ல ஆகிலும்: உன் திவ்ய சக்திகளும், செயல்களும், நாமங்களும், பெருமைகளும் என் புறிதலுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை பெயரிடும் ஆற்றல்கூட எனக்கில்லை.
சாமவேத கீதனாய சக்ரபாணி அல்லையே: சாமவேதம் கூறும் சக்கரம் தரித்த ஆதி தெய்வம் நீதான் என்று அறிந்தபின், அந்த சக்தி யாருக்குமில்லை என்றறிந்து சமாதானமானேன்.

