திருச்சந்த விருத்தம் 15/766: அங்கமாறும் வேதநான்கு
சார்ங்க பாணி நீதான்
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
அங்கமாறும் வேதநான்கு
மாகிநின்ற வற்றுளே,
தங்குகின்ற தன்மையாய்த
டங்கடல்ப ணத்தலை,
செங்கண்நாக ணைக்கிடந்த
செல்வமல்கு சீரினாய்,
சங்கவண்ண மன்னமேனி
சார்ங்கபாணி யல்லையே? 15
பொருள்
“நான்கு வேதங்களுக்கும், ஆறு வேதாங்கங்களுக்கும் சாரமாக, ஆதார நாடியாக இருப்பது நீதான். விரிந்த பாற்கடலில் படம் விரித்து ஆடும் ஆதிசேஷன்மேல் படுத்துக் கிடப்பது நீதான். எல்லா செல்வங்களும் குணங்களும் உறைந்திருப்பது உன்னிடம்தான். கிருத யுகதில் சங்கின் நிறத்தை தரித்த நாயகனே, திரேத யுகதில் சார்ங்க வில்லை தரித்த இராமன் நீதானே?”
விளக்கம்
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று: ருக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதங்களும், மற்றும், ஸீக்ஷா (உச்சரிப்பு) , கல்பம் (சடங்குகள்), வியாகரணம் (இலக்கணம்), நிருக்தம் (சொற் கூறுகள்), சந்தஸ் (யாப்பிலக்கணம்) , ஜோதிஷம், ஆகிய வேதாங்கங்களும் பரம்பொருளாக உணர்த்துவது உன்னைத்தான்.
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய்: நீதான் அவற்றின் பொருளாகவும் சாரமாகவும் இருக்கிறாய்
தடங்கடல்:விரிந்து, பறந்து இருக்கும் பாற்கடல்
பணத்தலை, செங்கண் நாகணைக் கிடந்த: அங்கே, ஆதிசேஷன் தலை விரித்து உனக்கு குடைப்பிடிக்க, உன் ஸ்பரிசத்தினால் அவன் கண்கள் சிவந்திருக்க, , நீ அவன் மேல் பள்ளி கொண்டிருக்கிறாய்.
செல்வமல்கு சீரினாய்: எல்லா செல்வங்களும் எல்லா நல்ல குணங்களும் உன்னிடமே இருக்கின்றன.
சங்கவண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே: பாற்கடலில் இருக்கும் பெருமாளை அணுகுவது கடினமென்பதால், அவன் பக்தர்களின் அருகில் அவதரிப்பதை குறிப்பிடுகிறார் பிரான் இந்த பாசுரதில்.
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தில் அவதரிக்கிறான் பெருமான் - சத்திய/ கிருத யுகத்தில் வெண்மையாக, திரேத யுகத்தில் சிகப்பாக, த்வாபர யுகத்தில் கருப்பாக, கலி யுகத்தில் மஞ்சளாக அவதரிக்கிறான்.
கிருத யுகத்தில் தோன்றியபோது, அவன் நிறம் சங்கின் நிறத்தை ஒத்த வெண்மையாக இருந்ததை கூறுகிறார் ஆழ்வார். அவனே பின்னர் திரேத யுகதில் சார்ங்க வில்லை தரித்த இராமனாக அவதரித்தான் என்றும் உரைக்கிறார்.
பெருமாளின் செளலப்யம் ஆழ்வாரை பிரமிக்க வைக்கிறது.