திருச்சந்த விருத்தம் 18/769: விடத்தவாயொ ராயிரம்
பாம்பணைமேல் பள்ளிகொண்ட தன்மை என்னே!
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
விடத்தவாயொ ராயிரமி
ராயிரம்கண் வெந்தழல்,
விடுத்துவீழ்வி லாதபோகம்
மிக்கசோதி தொக்கசீர்,
தொடுத்துமேல்வி தானமாய
பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ
தென்கொல்வேலை வண்ணனே! 18
பொருள்
“நீல நிற கடவுளே! ஆயிரம் தலைகள் விஷம் கக்க, ஈராயிரம் கண்கள் சிவந்த தீ பொழிய இருக்கும் ஆதிசேஷன் மேல் படுத்திருப்பது ஏனோ? உன்னில் எப்போதும் திளைத்து, அளவில்லா ஜோதி வழிய அவனது தலைகள் சீரான விதானமாய் இருக்கும் அழகை காணவா? அல்லது திருப்பாற்கடலில் அவன் அறவணைப்பில் படுப்பது சுகமாயிருப்பதாலா? அல்லது தேவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவா?”
விளக்கம்
இந்த பாசுரத்தில், ஆழ்வார் ஆதிசேஷனின் அழகில் மயங்குகிறார்! பெருமாளும் மயங்குவதாகக் கூறுகிறார். திருமழிசையாழ்வார் மட்டுமில்லை, பொய்கையாழ்வாரும் ஆதிசேஷனின் பெருமைகளை முதல் திருவந்தாதியில் பாடுவது:
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
அணி விளக்காம் பூம் பட்டாம்
புல்கும் அணையாம் திருமாற்கு அரவு
விடத்த வாய் ஒராயிரம்: விஷம் கக்கும் வாய்கள் ஆயிரம்
ஈராயிரம் கண் வெந்தழல் விடுத்து:இரண்டயிரம் கண்களிலிருந்து பறக்கும் சிவந்த தீப்பொறிகள். இறைவன் எல்லாம் வல்லவன் என்றாலும், அனந்தனின் ஆழ்ந்த அன்பு பெருமாளை காக்க தூண்டுகிறது.
வீழ்விலாத போகம் மிக்க சோதி: இடைவெளியில்லாமல் பெருமாளை அனுபவித்துக்கொண்டிருக்கும் திருஅனந்தாழ்வானுக்கு தேஜஸ் கூடிக்கொண்டே இருக்கிறது.
தொக்க சீர் தொடுத்து மேல் விதானமாய: இடைவெளியில்லாமல், அடர்த்தியாய், ஒரே சீராய், அழகாய் ஆயிரம் தலைகளையும் விரித்து பெருமாளுக்கு அழகிய மேற்கூறையாய் இருக்கிறான். (இங்கே “மேல் விதானமாய தொக்க சீர் தொடுத்து” என்று மாற்றி படித்தால் நன்றாக புரியும்). ஆழ்வார் மட்டுமில்லை, பெருமாளும் அனந்தனின் அழகை இரசிக்கிறார்!
(தொக்க= இடைவெளியில்லாமல், அடர்த்தியாய்)
(விதானம்=மேல் கூறை)
பௌவநீர் அராவணை படுத்த பாயல்: திருப்பாற்கடல்மேல் அனந்தாழ்வான் என்ற பாம்பை பாயாகக் விரித்து
(பௌவநீர் = பாற்கடல்; பௌவம்=கடல் )
(பாயல்= பாய்/ படுக்கை)
பள்ளி கொள்வதென் கொல்: ஏன் படுத்துக் கொண்டிருக்கிறாய்? அவன் அழகைக் கண்டா? இல்லை, அந்த படுக்கையின் சுகத்தாலா? இல்லை தேவர்கள் கேட்டுக்கொண்டதாலா?
வேலை வண்ணனே: கடல் போல் நீல வண்ணமாக இருப்பவனே !
(வேலை=கடல்)

