திருச்சந்த விருத்தம் 17/768: ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
எல்லா மூர்த்திகளும் நீயே அல்லவோ?
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
நாலுமூர்த்தி நன்மைசேர்,
போகமூர்த்தி புண்ணியத்தின்
மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந
லங்கடல்கி டந்து,மேல்
ஆகமூர்த்தி யாயவண்ண
மென்கொலாதி தேவனே! 17
பொருள்
“நீதான் ஆதிமூர்த்தியான பரவாசுதேவன். வியூகவாசுதேவனாக நீயே சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்ற மூன்று மூர்த்திகளாக இருக்கிறாய். நீயே ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்ற நான்கு மூலப் பொருட்களாகவும் உன்னை மாற்றிக் கொண்டுள்ளாய். எண்ணில்லா விபவாமூர்த்திகளாக நீ பல அவதாரங்கள் எடுத்திருக்கிறாய். உன் பக்தர்கள் ஆழ்ந்து அனுபவிக்கும் போகமும் நீயே. எல்லா புண்ணியங்களும் உன்னிடமே உறைகின்றன. பாற்கடலில் அனந்த்தஸயனம் செய்யும் பெருமாளும் நீயே. இதைத் தவிர நீ கணக்கிலடங்கா அர்சாவதாரங்கள் எடுத்திருக்கிறாய். ஆதி தேவனே பூஜிக்கத்தக்க அனைத்தும் நீயல்லவோ?”
விளக்கம்
பரவாசுதேவனாக நித்ய விபூதியை நடத்துபவன் பெருமாளே. பல உருவங்களெடுத்து லீலா விபூதியை நடத்துபவனும் அவனே.
ஏக மூர்த்தி: பரவாசுதேவனை, “வாசுதேவோஸி பூர்ண” என்று குறிப்பிடுவதுண்டு. இதற்கு, அவன், ஞானம், பலம், ஐஷ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்களை தன்னுள் அடக்கி, எப்போழுதும் பூர்ணமாக இருக்கிறான் என்று பொருள். அவனே முதலான ஆதி மூர்த்தி.
மூன்று மூர்த்தி: வியூகவாசுதேவனாக அவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்ற மூன்று மூர்த்திகளாக இருக்கிறான்.
சங்கர்ஷனனாக, ஞானம், பலம், என்ற குணங்களுடன் அழிக்கும் தொழிலை மேற்கொள்கிறான்.
ப்ரத்யும்னனாக ஐஷ்வர்யம், வீர்யம் என்ற குணங்களுடன் ஆக்கும் தொழிலை செய்கிறான்.
அனிருத்தனாக சக்தி, தேஜஸ் என்ற குணங்களுடன் காக்கும் தொழிலை செய்கிறான்.
நாலு மூர்த்தி: மேலே குறிப்பிட்ட தொழில்களை செய்ய, (1) ப்ரதாநம் (மூலப்ரக்ருதி – இதிலிருந்துதான் எல்லாம் படைக்கப்படுகிறது. இது அசேதனம்) , (2) புருஷன் (சேதனம். அனைத்து ஜீவன்களின் மூலம்), (3) அவ்யக்தம் (வ்யக்தம்-தெரிகிற லோகம், அவ்யக்தம்-தெரியாத பரமாத்மா), மற்றும் (4) காலம் ஆகிய உருவங்களை தரித்து எம்பெருமான் லீலா விபூதியை நடத்துகிறான்.
நன்மை சேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி: சம்சாரதில் அவன் பக்தர்கள் அவனை அனுபவிக்க அவதாரங்களாகவும், பரமபதத்தில் அனுபவிக்க வாசுதேவனாகவும் இருக்கிறான் பெருமாள். பரமபக்தி உள்ளவர்களின் (பகவானின் பிரிவை தாங்க மாட்டாதவர்கள்) குறிக்கோளாகவும், அவனை சரணடைபவர்களின் தஞ்சமாகவும், அவனை பூஜிப்பவர்களின் பயனாகவும் அவனே உள்ளான். அதனால், அவனே எல்லா புண்ணியங்களுக்கும் உறைவிடம்.
எண்ணில் மூர்த்தியாய்: கீதையில் (9-11) அவன் கூறுவது: “அறிவில்லாதவர்கள் என்னை மனித உருவில் இருக்கும் ஒரு சாதாரண மனிதன் என்று நினைக்கிறார்கள். நான் இறைவன் என்பதை அறியாமல் என்னை அலட்சியப்படுத்துகிறார்கள்.” (“अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् | परं भावमजानन्तो मम भूतमहेश्वरम्, அவஞ்ஜானந்தி மாம் மூதா மானுஷீம் தனுமாஸ்ரிதம்| பரம் பாவமஜானந்தோ மம பூதமஹேஷ்வரம்”).
13வது பாசுரதில் மேற்கோள் காட்டப்பட்டது போல், புருஷ ஷூக்தம் “பரமபுருஷனுக்கு பிறப்பில்லை என்றாலும், அவன் பலவிதமாக அவதாரம் எடுக்கிறான். இதை கற்றவர்கள் மட்டுமே அறிவார்கள்.” (“அஜாயமானோ பஹுதா விஜயாதே தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம்”) என்று கூறுகிறது. அவன் கணக்கில் அடங்கா விபவாமூர்த்திகளாக அவதாரங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறான். இவற்றில், இராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் அடங்கும்.
நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து: அயோத்தி, மதுரை போன்ற புண்ணிய ஸ்தலங்கள் பிரளயத்தின் போது மறைந்து விடும். ஆனால், என்றும் இருக்கும் பாற்கடலில் அனந்த்தாழ்வான் மேல் படுத்துக் கிடக்கும் தெய்வம் நாராயணனே.
மேல் ஆகமூர்த்தி ஆயவண்ணம் என்கொல் ஆதிதேவனே!: கிருஷ்ணன் கீதையில் (4-11) “ஓ அர்ஜுனனே, எந்த வழியில் மக்கள் என்னிடம் வருகிறார்களோ, அந்த வழியில் நான் அவர்களுக்கு பலன் அளிக்கிறேன். ஒவ்வொரு மனிதரும் தங்கள் விருப்பப்படி என்னுடைய பாதையைப் பின்பற்றுகிறார்கள்” (“ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् | मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्थ सर्वश:”, “யே யதா மாம் ப்ரபத்யந்தே தான்ஸ்ததைவ பஜாம்யஹம் | மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யாஹ் பார்த ஸர்வஷாஹா |”) என்று கூறுகிறான். அதன்படி, அவன் எண்ணில்லா அர்சாவதார மூர்த்திகளாக அவன் பக்தர்கள் விருப்பத்திற்கேற்ப உருவெடுக்கிறான். ஆதிதேவனான அவன் தன் அப்ராக்ருத உருவத்தை தன் பக்தர்களுக்காக, எந்த ப்ராக்ருத பொருளிளும் அர்சாவதாரங்களாக புகுத்துவது அவனது அளவில்லா கருணையால் அல்லவோ?
ஆதி தேவனே, பூஜிக்கதக்க அனைத்தும் நீயே அல்லவோ?

