திருச்சந்த விருத்தம் 20/771: கூசமொன்று மின்றிமாசு
பாம்பணையில் படுத்த எளிமை என்னே!
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
கூசமொன்று மின்றிமாசு
ணம்படுத்து வேலைநீர்,
பேசநின்ற தேவர்வந்து
பாடமுன்கி டந்ததும்,
பாசநின்ற நீரில்வாழு
மாமையான கேசவா,
ஏசவன்று நீகிடந்த
வாறுகூறு தேறவே. 20
பொருள்
“ஆதிகாலத்திலிருந்து இருக்கும் பரம்பொருளான நீ, கூச்சமே இல்லாமல் பாற்கடலின்மேல் ஒரு பெரிய பாம்பை பாயாய் விரித்து அந்தக் கடல் ஆர்ப்பரிக்க படுத்துக் கிடகிறாய். பிரம்மாதி தேவர்கள் உன் புகழ் பாட இந்தப் பாற்கடலின்மேல் வந்து நிற்கிறார்கள். அவ்வளவு மேன்மை உள்ள கேசவா, நீ பலரும் ஏசும்படி இருக்கும் ஒரு சாதரண ஆமையின் உருவைக் கொண்டு அன்று, ஆபத்து நிறைந்த பாற்கடலைக் கடையும் மத்தைத் தாங்கி நிற்கும் எளிமையை நான் நன்கு புரிந்து கொள்ளும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.”
விளக்கம்
எல்லா அவதாரங்களிலும் பரத்வ சௌலப்யங்கள் இரண்டுமே கலந்தே இருக்கும். நீர்மைக்கு எல்லை பாற்கடல் சயனம்; எளிமைக்கு எல்லை கடல் கடைந்தது. இந்த இரண்டும் ஒரு சேர இருப்பதெப்படி என்று பகவானை விளக்க கோருகிறார் ஆழ்வார்.
இந்தப் பாசுரத்தை புரிந்து கொள்வது எனக்கு சற்று கடினமாக இருந்தது. தவறுகள் இருப்பின், மன்னித்து சரியான அர்தத்தைச் சுட்டிக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கூசமொன்றும் இன்றி: கூச்சமே இல்லாமல்.
மாசுணம் படுத்து வேலை நீர் பேச: ஆதிசேஷன் என்ற பெரும் பாம்பின்மேல் பாற்கடலில் படுத்துக்கொண்டிருக்கிறான் பெருமாள். அந்தக் கடல், அவன் தனக்குள் இருப்பதை எண்ணி, சந்தேஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
(மாசுணம்= பெரும் பாம்பு)
(வேலை= கடல்)
நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்: ஆதிகாலதிலிருந்து, பிரம்மாதி தேவர்கள் உன் புகழ் பாட உனக்கு பிடித்த இந்தப் பாற்கடலின்மேல் வந்து நிற்க, நீ இந்தப் பாற்கடலின்மேல் சயனித்திருக்கிறாய்.
(முன் கிடந்ததும் = ஆதி முதல் படுத்திருக்கும்). இங்கே, முதல் வரியான, “கூசமொன்றும் இன்றி” உடன், “முன் கிடந்ததும்” என்ற வரியையும் சேர்த்துப் படித்தால், “ஆதி தேவனான நீ, இவ்வளவு எளிமையாக, ஒரு பாம்பை படுக்கையாகக் கொண்டிருக்கிறாயே” என்ற பொருள் வருகிறது.
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா: “பாசம்” என்பது, வருண பகவானின் ஆயுதமான பாசத்தைக் குறிக்கிறது. பலவகையான ஆபத்துகளின் குறியீடாக இந்த பாசம் இருக்கிறது. கேசவன், பாற்கடலைக் கடையும் மத்தைத் தாங்க, கூர்மாவதாரம் எடுத்ததைப் பற்றியது இந்த வரி.
கேசவா, ஏச அன்று நீ கிடந்தவாறு: ஆதிபகவனான கேசவன், தேவர்களுக்கு உதவ, ஏளனத்திற்குறிய ஒரு ஆமையாக அவதாரமெடுத்தது அவனது சௌலப்யதினால் அன்றோ?. அறியாதவர்கள் ஏசுவார்களே என்ற கூச்சமும் எம்பெருமானுக்கு இல்லை.
கூறு தேறவே: அவனின் பரத்துவத்தையும் சௌலப்யதியத்தையும் எனக்கும் புரியும்படி எனக்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார், ஆழ்வார்.


The explanation is to the point and apt. No need for disclaimer!