திருச்சந்த விருத்தம் 21/772: அரங்கனே தரங்க நீர்
நீ கடல் கடைந்தபோது சூரர்கள் என் செய்தனர்?
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
அரங்கனே!த ரங்கநீர்க
லங்கவன்று குன்றுசூழ்,
மரங்கள்தேய மாநிலம்கு
லுங்கமாசு ணம்சுலாய்,
நெருங்கநீ கடைந்தபோது
நின்றசூர ரென்செய்தார்,
குரங்கையா ளுகந்தவெந்தை!
கூறுதேற வேறிதே. 21
பொருள்
“அமுதம் திரட்ட அன்று பாற்கடலை கடைந்தபோது, கடல் கலங்கியது. மத்தாக இருந்த மந்தர மலையிலிருக்கும் மரங்கள் தேய்ந்தன. பூமியே அதிர்ந்தது. வாசுகி என்ற பெரும் பாம்பை இறுக்கிக் கட்டி சுழற்ற இழுக்கத் தயாராக தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையின்இரு பக்கமும் நின்றிருந்தனர். ஆனால், இவையனைத்தும் வெறும் ஜாலமே. பாற்கடலைக் கடைந்ததென்னவோ நீதான்! இதேபோல், இராமனாக இராவணனைக் கொன்றபோதும், வானரப்படைதான் இலங்கையை அழித்தது என்று உலகோர் சொல்லவைத்தாய். இப்படி உன் செயல்களை பிறர் செய்ததாக ஏன் நீ விளையாடுகிறாய் என்று எனக்கும் புரியுமாறு அனுக்கிரஹம் செய், அரங்கனே”
விளக்கம்
எல்லாம் அவன் செயலென்றாலும், பெருமாள் அவனது கருணையால் அவை பிறர் செய்ததாக அனைவரும் சொல்லுமாறு லீலை செய்கிறான் என்கிறார் ஆழ்வார்.
அரங்கனே: ஶ்ரீரங்கத்திலிருக்கும் இரங்கநாதனே
தரங்க நீர் கலங்க: அலைகள் கொண்ட கடல் பொங்கி, கலங்கியது
(தரங்க நீர்=அலை கடல்)
அன்று: துர்வாஸ மகரிஷியின் சாபத்தினால் தங்கள் செல்வத்தையும் தேஜஸையும் இழந்த தேவர்கள் அவனைச் சரணடைந்தபோது, பாற்கடலைக் கடைய அவர்களுக்கு உதவினான்.
குன்று சூழ் மரங்கள் தேய: இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையை மத்தாக நாட்டி கடந்தனர். அப்படி கடையும்போது, மலையில் இருக்கும் மரங்கள் எல்லாம் தேய்ந்தன.
மாநிலம் குலுங்க: பாற்கடலின் அருகே இருக்கும் புஷ்கரத்தீவு என்னும் நிலம் கடைதலின் அதிர்ச்சியால் குலுங்கியது
மாசுணம் சுலாய் நெருங்க: வாசுகி என்ற பெரும் பாம்பே கடையும்போது கயிராக இருந்தது. அதை, அழுத்தமாக், நெருக்கமாக, மந்தர மலையின்மேல் சுற்றினார்கள்
(மாசுணம் = பெரும் பாம்பு;சுலாய் = சுலாவுதல்- சுற்றுதல்)
நீ கடைந்தபோது: கடலைக் கடைந்த போது தேவர்களும் அசுரர்களும் கடைவதற்காகக் கைவைத்து உடனே களைத்தும் போயினர். பின்னர் ஆமை வடிவில் மத்தைத் தாங்கிக் கொண்டிருந்த பெருமாள்தான் பாற்கடலை கடைந்தான்.
நின்ற சூரர் என்செய்தார்: நிலைமை இப்படி இருக்க, கயிற்றை பிடித்துக் கொண்டிருந்த சூரர்கள் என்ன செய்தார்கள்? உலகோர் “தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தார்கள்” என்றே கூறும்படி நீ செய்ததேன்?
குரங்கை ஆள் உகந்த எந்தை: இராமனாக குரங்குகளை படையாகக் கொண்டு, அவர்கள் அவனை கொண்டாடும் வகையில், இராவணனை கொன்றபின், “வானரங்களே இலங்கையை நிர்மூலமாக்கினார்கள்” எல்லோரும் சொல்லவைத்ததேன்?
கூறு தேற வேறு இதே: இந்தக் காரணத்தை நான் தெரிந்து கொள்ளும்படி அருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் ஆழ்வார்.
இந்த பாசுரதின் உள்ளர்த்தம், எம்பெருமான், தன் பக்தர்கள்மேல் ஆசரித பக்ஷபாதம் உள்ளவன் என்பதே. அதாவது, பெருமாள், தன் பக்தர்கள்மேல் தனி ப்ரீதி உடையவனென்றும் அவர்களுக்காக எதையும் செய்வான் என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.