திருச்சந்த விருத்தம் 22/773: பண்டுமின்று மேலுமாயோர்
ஆலிலைமேல் துயின்றவனே!
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
பண்டுமின்று மேலுமாயோர்
பாலனாகி ஞாலமேழும்,
உண்டுமண்டி யாலிலைத்து
யின்றவாதி தேவனே,
வண்டுகிண்டு தண்டுழாய
லங்கலாய்!க லந்தசீர்ப்,
புண்டரீக பாவைசேரு
மார்ப!பூமி நாதனே! 22
பொருள்
“வண்டுகள் துளைக்கும் வகையில் வாடாத, குளிர்ந்த துளசி மாலை அணிந்து நீ, மார்பில் தாமரை மலரில் உதித்த திருமகள் உறைய, பூமகள் அருகில் இருக்க, நீ பக்தர்களைப் பார்க்கும் போது, உன் தயை பெருகுவதில் ஆச்சர்யம் என்ன? அவர்கள் உன்னைப் பிரியாமல் இருப்பதால், உனக்கு இந்த ஆசரித பக்ஷபாதம் எப்போதும் இருப்பதில் வியப்பென்ன? அன்றும், இன்றும் இன்னும் வரும் காலத்திலும் சேதன, அசேதனங்களை நீயே ரக்ஷிக்கிறாய் பெருமாளே. பிரளய காலத்திலே ஒரு குழந்தயாய் உருவேடுத்து, ஏழு உலகங்களையும் அதில்லுள்ள எல்லாவற்றையும் விரும்பி முழுங்கி அனைத்தையும் காக்கும் ஆதிதேவன் நீயே. என்னே உன் கருணை!”
விளக்கம்
ஆழ்வார் பெருமாளின் ஆசரித பக்ஷபாதம் அவனுக்கு எப்போதும் இருக்கும் குணம் என்றும், இந்த லக்க்ஷணம் அவனது படைப்பிலிருக்கும் எல்லா வஸ்துக்களிடமும் காட்டுகறான் என்றும், அது ஏன் என்ற காரணத்தையும் கூறுகிறார் இப்பாசுரதில். முதல் பாதியில் அவனது ரக்ஷத்துவத்தை பறைந்துவிட்டு அது ஏன் என்று இரண்டாவது பாதியில் கூறுகிறார். அதனால், இரண்டாவது பாதியை முதலில் படித்துவிட்டு முதல் பாதியை அப்புறம் வாசித்தால், பாசுரம் இன்னும் எளிதாக புரியும்.
பண்டும் இன்றும் மேலுமாய்: முன்பும், இன்றும், இனி வரும் காலத்திலும் ... இதை இன்னும் ஆழமாக, “சிருஷ்டிக்கு முன்னும், இந்த லோகத்திலும் பிரளயதிற்க்கு பிறகும்” என்றும் படிக்கலாம். சாந்தோக்கிய உபனிஷத் 6-2-1 இதையே கூறுகிறது: “ஸோம்ய, சத் என்னும் பிரம்மம் மட்டுமே ஆதியில் இருந்தது. அதைத் தவிர் வேறு எதுவும் இல்லை. சிலர் "சிருஷ்டி தொடங்குவதற்கு முன், வெறுமையான் இருளே (தமஸ்) இருந்தது. அதிலிருந்து தோன்றியதே பிரபஞ்சம் “ என்கின்றனர். அந்த தமஸிலும் இருந்தான் பெருமாள். (सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम् । तद्धैक आहुरसदेवेदमग्र आसीदेकमेवाद्वितीयं तस्मादसतः सज्जायत ॥ ६.२.१ ॥ சதேவ சோம்ய இதமக்ர ஆஸித் ஏகமேவ அவித்யம்| ததைக்க ஆஹுரசதேவேதமக்ர ஆஸிதேகமேவா த்விதயம் தஸ்மாதசத: சஜ்ஜாயத||)
(பண்டு = பழைய; அன்று
ஓர் பாலனாகி ஞாலம் ஏழும்: குழந்தையாய் ஏழு உலகத்தையும் (பிரபஞ்சம்), அதிலுள்ள அனைத்தையும் (சேதன/ அசேதன வஸ்துக்கள் எல்லாம்) ...
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதி தேவனே: அந்த பிரபஞ்சத்தை விழுங்கி தன் உந்தியில் பாதுகாத்த ஆதி தேவன் பெருமாளே. உண்டுவிட்டு, ஆசையாய் ஆலிலை மேல் ஊழி வெள்ளத்தின்போது மிதக்கிறான் எம்பெருமான்.
(மண்டி=விரும்பி)
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய்: ஒரு மலரோ, கொடியோ தளிராக இருக்கும்போதுதான் வண்டுகளும் தேனிகளும் அதை மொய்க்கும். அப்படி இளசாக இருக்கும் துளஸியாலான குளிர்ந்த மாலை அணிந்திருக்கிறான் நாராயணன்.
(கிண்டு = துளைத்த; தண் = குளிர்ந்த; அலங்கல்=மாலை)
கலந்த சீர்ப்,புண்டரீக பாவை சேரு மார்ப: திருவாய்மொழியில் (6-10-10 ) நம்மாழ்வார் “அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!” என்று கூறுவதற்கிணங்க, திருமழிசையாழ்வாரும் மகாலட்சுமி பெருமாளை விட்டு பிரிவதேயில்லை என்கிறார். “சீர் கலந்த புண்டரீகம்” என்றால் அழகு சேர்ந்த தாமரை மலை என்று பொருள். அதில் பிறந்த ஶ்ரீதேவி பிராட்டி, பெருமாளின் வலது மார்பிலேயே விலகாமல் எப்பொழுதும் இருக்கிறாள்.
பூமி நாதனே: பூதேவியின் தலைவனே.
இங்கு கவனிக்க வேண்டியது, பிராட்டி இருக்கும்போது, பெருமாள் தண்டிப்பது இல்லை. அவள் எப்போதும் இருப்பதால், அவன் தயை மிகுந்து சிருஷ்டியில் உள்ள எல்லாவற்றின் மேலும் ஆசரித பக்ஷபாதம் இருபதில் வியப்பென்ன?