(Image:https://za.pinterest.com/pin/358739926537811111/ )
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
ஆதியாதி யாதிநீயோ
ரண்டமாதி யாதலால்,
சோதியாத சோதிநீஅ
துண்மையில்வி ளங்கினாய்,
வேதமாகி வேள்வியாகி
விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய
மாயமென்ன மாயமே? 34
பொருள்
“அனைத்துக்கும் மூலமான நீ, அனைத்துக்கும் காரணமான நீ, அனைத்து வேதங்களுமான நீ, அனைத்து வேள்விகளுமான நீ, அனைத்து உலகமும் ஆன நீ, ஆயர் குலத்தில் பிறந்தது ஏன்ன மாயம்?”
விளக்கம்
அனைத்துக்கும் மூலமான ஆதிபகவன், ஆயர் குலத்தில் பிறந்த ஆச்சரியத்தை ஆராய்கிறார் ஆழ்வார். முதல் நோக்கில் இந்த பாசுரம் எளிமையான தோன்றினாலும் முதல் பாசுரங்களைப்போல் நிறைய விஷயங்களை அதனுள்ளே மறைத்து வைத்திருக்கிறார் ஆழ்வார்.
ஆதி ஆதி ஆதி நீ: ஆழ்வார், மூன்று முறை “ஆதி” என்ற பதத்தை உபயோகப்படுத்தி மூன்று வகையான காரணங்களும் நாராயணனே என்று அடிகோடிடுகிறார்.
"உபாதான, சககாரி, நிமித்த காரணம்" என்பவை, ஒரு பொருளின் உருவாக்கம் அல்லது நிகழ்வுக்கு தேவையான காரணிகளை குறிக்கும் சொற்கள்.
உபாதான காரணம்: ஒரு பொருளின் மூலப்பொருள் அல்லது அடிப்படையான பொருள் ஆகும். உதாரணமாக, பானை செய்ய களிமண் உபாதான காரணமாகும்.
நிமித்த காரணம்: ஒரு பொருளை உருவாக்குவதற்கு அல்லது செயலைச் செய்வதற்கு பொறுப்பானவர் அல்லது செயலைச் செய்யும் முதன்மை நபர் ஆவார். உதாரணமாக, பானை செய்ய குயவன் நிமித்த காரணம் ஆவார்.
சககாரி காரணம்: ஒரு பொருளை உருவாக்க அல்லது ஒரு செயலைச் செய்வதற்கு உதவும் துணை காரணிகள் அல்லது மற்றவை. உதாரணமாக, களிமண்ணும் குயவனும் இருந்தாலும், தண்ணீர், சக்கரம் போன்ற கருவிகள் சககாரி காரணங்கள் ஆகும்.
இது பற்றி மேலும் ஆழமாக அறிய கீழ்கண்ட இணையத்தில் பார்க்கவும்: https://tidley.com/2020/07/15/ஸ்ரீ-பாஷ்யம்-2-1-8-உபாஸம்ஹரண/
ஓர் அண்டம் ஆதி: பரந்தாமனே அண்டசராஸரங்களும் ஆகி இருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
ஸ்ரீ விஷ்ணு புராணம் (2-7-27) கூறுவதாவது: “இதைப் போன்ற பிரம்மாண்டங்கள் பிரபஞ்சத்தில் பல ஆயிரங்கள், லக்ஷங்கள் கோடிகள் இருக்கின்றன”
(“அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச | ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச|)
அவை அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பது அவனே. இங்கே “ஒர் அண்டம்” பல அண்டங்களையே குறிக்கிறது. இந்த “ஆதி” ஆகின்றாய் என்னும் பொருளுடையது. (நிகழ்கால முன்னிலை ஒருமை வினைமுற்று. (https://www.tamilvu.org/courses/degree/a021/a0212/html/a0212304.htm))
ஆதலால் சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்: அவனே ஜகத் காரணனன் ஆனதால், அவனே உபாசிக்க தகுந்தவன். ஆகையால் அவனை சோதிக்க வேண்டிய அவசியமின்றி, பரந்தாமனே பரஞ்சோதி என்று அறிந்துகொள்ளலாம். இது பிரம்ம ஸூத்திரத்தில் இருப்பதுபோல், திரிவித மகாபூதங்கள் பரஞ்சோதியா, அல்லது அது வைஸ்வானர அக்னியா என்ற விவாதங்களுக்கு இடமின்றி நாராயாண ஸூக்தத்தம் (4-5) தெளிவாக்குகிறது:
“நாராயணனே மகா ஞானி. அவனே விஸ்வாத்மா; அவனே பரஞ்சோதி; அவனே பரமாத்மா; அவனே பரப்பிரம்மா; அவனே பரதத்துவம்; அவனே பரத்தியானம் அவனே பரத்தியாதா (தியானிக்க தகுந்தவன்” என்று கூறுகிறது. (“नारायणः परो ज्योतिरात्मा नारायणः परः । नारायणं परं ब्रह्म तत्त्वं नारायणः परः ॥ नारायणः परो ध्याता ध्यानं नारायणः परः । यच्च किंचित् जगत्सर्वं दृश्यते श्रूयतेऽपि वा । अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्तं नारायणः स्थितः/ நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர: | நாராயண பரம் ப்ரம்மா தத்த்வம் நாராயண: பர: | நாராயண பரோ த்யாதா தியானம் நாராயணா பர:||”).
அதனால், அவனே பரந்தாமன் என்பது பரிட்சைக்கிடமின்றி தெளிவாகிறது.
வேதமாகி வேள்வியாகி: பெருமாளே வேதம் கூறும் பரம்பொருள். பிரளயத்தை தாண்டி வேதங்கள் நிலைப்பதற்கு அவனே காரணம். எல்லா வேள்விகளும் அவனுக்கே ஆஹுதிகள் சமர்பிக்கின்றன.
இதை பகவானே கீதையில் (9-24) கூறுகிறான்: “அனைத்து யாகங்களையும் அனுபவிப்பவன் நானே. மற்றும் நானே அனைத்து யாகங்களுக்கும் உரிய இறைவன். ஆனால் என் தெய்வீக இயல்பை உணரத் தவறியவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்” (“अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च | न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते || 24|| அஹம் ஹி ஸர்வயஞானாம் போ4க்1தா1 ச1 ப்1ரபு1ரேவ ச1 | ந து1 மாமபி4ஜானன்தி1 த1த்1த்1வேனாத1ஶ்ச்1யவன்தி1 தே1 ||24||”)
(அஹம்——நான்; ஹி——உண்மையாக; ஸர்வ——எல்லா; யஞ்ஞானாம்——தியாகங்களையும்; போக்தா——அனுபவிப்பவர்; ச——மற்றும்; பிரபுஹு——இறைவன்; ஏவ——மட்டும்; ச——மற்றும்; ந——இல்லை; து——ஆனால்; மாம்——என்னை;—அபிஜாநந்தி——உணர்கின்றனர்; தத்வேன——தெய்வீக இயல்பை; அதஹ——எனவே; ச்யவந்தி——கீழே விழுகின்றனர் (ஸம்ஸாரத்தில் அலைந்து); தே——அவர்கள்)
விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி: இங்கே, “விண்” என்பது பரமபதம்; “மண்” என்பது பதினாலு லோகங்களைக் கொண்ட போகபூமி. மகாவிஷ்ணுதான் இரண்டையும் ஆள்கிறான்; அவனை நோக்கி யாகம் செய்பவர்களின் மனநிலையை பொருத்து ஒன்றையோ மற்றதையோ அருள்கிறான். யாகம் செய்பவர்கள் பற்றின்றி, பரதத்துவத்தை அறிந்து இருந்தால், மோக்க்ஷதை அளிக்கிறான்; இல்லையெனில், இகசுகத்தை அளிக்கிறான்.
ஆயன் ஆய மாயமென்ன மாயமே: இவ்வளவு உயர்ந்த ஆதிமூலம் ஒரு சாதாரண ஆயர்குல இடையனாக அவதாரமெடுக்கிறானென்றால் அது புரிபடாத விந்தை!
Thank you for explaining the “para” tattvam🙏