திருச்சந்த விருத்தம் 35/786: அம்புலாவு மீனுமாகி
ஆயச்சியின் பிள்ளை நீயா?
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
அம்புலாவு மீனுமாகி
யாமையாகி ஆழியார்,
தம்பிரானு மாகிமிக்க
தன்புமிக்க தன் றியும்
கொம்பராவு நுண்மருங்கு
லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண
மென்கொலோவெம் மீசனே! 35
பொருள்
“சக்கரத்தாழ்வாரை ஆளும் எம்பெருமானே, நீ கடலில் மீனாகவும் ஆமையாகவும் வந்தது உன் அன்பினால் தானே? அதனால் உன் பெருமை கூடுகிறது. அதையும் தாண்டி, உன் சுதந்திரத்தை விட்டுவிட்டு, கொடி இடையாள் யசோதையின் மகனாக ஆயர் குலத்தில் அவளுக்கு அடங்கி பிறந்ததும் உன் அன்பினால் தானே? உன் சௌலப்யத்தை எப்படி வர்ணிப்பேன், எம் ஈசனே?”
விளக்கம்
எல்லாம் வல்ல பெருமாள், தன் சுதந்திரத்தை விட்டுவிட்டு, தன்னை யசோதையின் ஆளுமையில் கீழ் உட்படுத்திக்கொண்டதை கண்டு வியப்பில் ஆழ்கிறார் அழ்வார்.
அம்பு உலாவு மீனுமாகி ஆமையாகி: நீரில் இருக்கும் மீனாகி, ஆமையாகி ... உம்காரம் இருபதால், மனித உருவம் தவிர விலங்கினமாகவும் அவதாரமெடுத்து அவன் தன் கருணையை காட்டுகிறான்.
(அம்பு: அப்புவிலிருந்து வந்தது; நீர்/ கடல்)
ஆழியார் தம்பிரானும் ஆகி: சக்கரத்தாழ்வானின் தலைவனாக இருக்கிறான் பெருமாள். இருந்தும், ஈனமான விலங்கினமாக அவதரித்தான்.
மிக்கது: அவ்வளவு மாட்சிமை உள்ள பெருமாள், மீனாகவும் ஆமையாகவும் தோன்றுகிறானென்றால், அது அவன் பெருமையை குறைக்காது. மாறாக, அவன் கீர்த்தியை கூட்டவே செய்யும்.
அன்புமிக்கது அன்றியும்: திருமால் இவ்வாறு தன்னை தாழ்த்திக் கொண்டு, ஆமையாய், ஏனமை அவதரித்தது நம் பால் அவனுக்கிருக்கும் அளவுகடந்த அன்பினால் தானே? வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது. இன்னுமோர் அவதாரத்தில் அவன் ஒரு படி மேலே போய் தன் சுதந்திரத்தையே விட்டுக் கொடுக்கிறான்!
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்: ஒரு குச்சி போன்று, ஒரு பாம்பைப் போன்று, கொடி இடை உடைய யசோதையின் மகனாக ஆயர் குலத்தில் கிருஷ்ணனாக அவதரித்தான். இதில் கவனிக்க வேண்டியது, மீனாய் ஆமையாய் உருவேடுத்தபோது, அது ஈன பிறவியாய் இருந்தாலும், அவன் தன் இஷ்டப்படி நடந்து கொண்டான். ஆனால், கண்ணனாக, இருந்த போது, யசோதையின் ஆளுமைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டான், அவள், எல்லா தாய்மார்களைப் போலவும் அவனை கட்டிப் போட்டாள். அடித்தாள், அதட்டினாள். பரந்தாமன் இப்படி தன் சுதந்திரத்தைகூட விட்டுவிட்டு அவதார நோக்கத்தை முடிக்க அதை பொறுத்துக் கொண்டான். அதுவும் அவன் அன்பினால்தானே?
(அராவு:பாம்பு; மருங்குல்: இடை)
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ எம் ஈசனே: இவ்வளவு எளிமையாக தன் பக்தர்களை காக்க வந்தானே இறைவன், அவன் சௌலப்பியம் வியக்க வைக்கிறது!
இங்கே “எம்பிரான்” என்ற பதத்தை பிரயோக படுத்தியிருப்பதை கவனிக்க வேண்டும். இதன் மூலம், ஆழ்வார் எல்லா ஆழ்வார்களும் அவனின் சௌலப்யத்தை அனுபவித்திருப்பதை கோடு இடுகிறார்.
பி.கு.: நான் பயணம் செல்வதால், வரும் வாரத்தில் (19வது தேதி முடிய வரும் வாரம்) இந்த பிரசுரங்கள் இருக்காது. என்னால் முடிந்தால் பிரசுரிக்கிறேன்.