திருச்சந்த விருத்தம் 36/787: ஆடகத்த பூண்முலை
கோபியருடன் குலாவிய குழந்தை!
நான் பயணம் சென்று வந்ததாலும், பிறகு நோய்வாய் பட்டதாலும் கிட்ட தட்ட ஒரு மாதம் இந்த பணியை செய்ய முடியாமல் போய்விட்டது.
இந்த தடங்கலுக்கு வருந்துகிறேன். இனி வரும் நாட்களில் வேறு எதுவும் இந்த முயற்சியில் குறிக்கிடாது என்று நம்புகிறேன்.
இனி, இன்றய பாசுரமும் அதன் விளக்கமும்:
(Image:(https://www.facebook.com/photo.php?fbid=341908285933583&id=203845823073164&set=a.203848496406230)
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
ஆடகத்த பூண்முலைய
சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி
கள்ளதாய பேய்மகள்
வீடவைத்த வெய்யகொங்கை
ஐயபால முதுசெய்து,
ஆடகக்கை மாதர்வா
யமுதமுண்ட தென்கொலோ? 36
பொருள்
“பொன்னால் தன் முலையை அலங்கரித்துக்கொண்ட யசோதையின் மகனாக அவதரித்தபோது, எத்தனை லீலைகள் புரிந்தாய் எம்பெருமானே! சகடாசுரனை உதைத்துக் கொன்றாய். பகாசுரன் என்ற கொக்கை வாயை பிளந்து கொன்றாய். தன் முலையில் விஷம் வைத்து உன்னை தந்திரமாய் கொல்ல முயன்ற பூதனையை அந்த முலையின் வழியாகவே அவளின் உயிரை உறிஞ்சிக் குடித்தாயே! அதே நேரத்தில் ஒரு விடலையாய் பொன்வளை அணிந்த ஆய்ச்சிகளொடு குலாவியதும் நீதானே?”
விளக்கம்
கிருஷ்ணாவதாரத்தில், யசோதயாயின் குழந்தயாய் இருந்த பெருமாள், கோபியருடன் குலாவியபோது காளையாக உருமாறியது என்ன மாயம் என்று வியக்கிறார் ஆழ்வார்!
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்: தங்கத்தாலான அணிகலத்தினால் தன் மார்பகத்தை அலங்கரித்துக் கொண்டவள் யசோதை. அந்த ஆய்ச்சியின் மகனாய் அவதரித்த தாமோதரன், முழுமையாய் தன்னை அவளின் ஆளுமைக்கு உட்படுத்திக் கொண்டான்.
(ஆடகம்:தங்கம்; பூண்: அலங்காரம்)
சாடு உதைத்து: சகடாசுரன் ஒரு வண்டியாக உருவெடுத்து கண்ணனை அழிக்க வந்தபோது, குழந்தை கண்ணன் அவனை உதைத்து ஒழித்தான். பக்தர்கள் தங்கள் விமோசனத்துக்காக அண்டும் அதே கால்களால் ஒரு அசுரனை ஒழித்த அதிசயத்தை கண்டு வியக்கிறார் ஆழ்வார்.
(சாடு: வண்டி)
ஓர் புள்ளது ஆவி: பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு உருவமாக பாலகன் கிருஷ்ணனை கொல்ல வந்த போது, அவன் வாயைப் பிளந்து அவனை அனாயாசமாக கொன்றான் குழந்தை கண்ணன்.
(புள்: பறவை)
கள்ளதாய பேய்மகள் வீட வைத்த வெய்ய கொங்கை: கெட்ட எண்ணத்துடன் தந்திரமாக கோபாலனை வீழ்த்த தன் முலையில் விஷம் தோய்த்து வந்தாள் பூதனை என்னும் பேய்
(வீட: வீழ; வெய்ய: கொடிய)
ஐய பால் அமுது செய்து: நுண்ணிய அவளது உயிரை பாலுடன் சேர்த்து உண்டான் மாதவன்; அவளையும் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். இதை “அய்யா, அந்த பாலுடன் அவள் உயிரையும் உறிஞ்சினாயே”, என்றும் பொருள் கொள்ளலாம்.
(ஐய: நுண்ணிய அல்லது “ஐயா” என்னும் விளிச்சொல்)
ஆடகக் கை மாதர் வாய் அமுதம் உண்டது என்கொலோ: கையில் தங்க வளை அணிந்த ஆயர் குல மாதர்கள் அவனை தூக்கிச் சென்று கொஞ்சும் போது, பாலகன் ஒரு விடலை பையனாய் மாறி, அவர்கள் வாய் அமுதத்தை அருந்திய அதிசயத்தை கண்டு வியக்கிறார் ஆழ்வார். கோபியரின் கைகள் “பூஷணம் தறித்த கைகள்” என்று ஆழ்வார் குறிப்பிட்டு சொல்வதற்கு அவை கண்ணபிரான் பிடிக்கும் கை என்பதாலா, அல்லது அவை அவனை அணைப்பதாலா என்று ஆழ்வார் விளக்கவில்லை. ஒருவேளை, பூதனையின் நஞ்சிற்கு அந்த வாய் எச்சில் ஒரு மாற்றோ என்று வினவிகிறார்!
யசோதையில்... Typo? ஐய! விளிச்சொல் என்றே பொருள் கொள்ளலாம்.
Happy you have resumed. Wishing you a non stop spell here onwards.