திருச்சந்த விருத்தம் -7/ 758:ஒன்றிரண்டு
முக்கண்ணனும் உன்னை உள்ளவாறு துதிக்க முடியாது
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
ஒன்றிரண்டு மூர்த்தியா
யுறக்கமோடு ணர்ச்சியாய்,
ஒன்றிரண்டு காலமாகி
வேலைஞால மாயினாய்,
ஒன்றிரண்டு தீயுமாகி
யாயனாய மாயனே,
ஒன்றிரண்டு கண்ணினானு
முன்னையேத்த வல்லனே? 7
பொருள்
“நீயே மும்மூர்த்திகளில் முதல்வன். பிரம்மா, சிவன் இருவருக்குள்ளும் நீயே இருக்கிறாய். உறங்கி இருக்கும் ஞானமற்ற பொருட்களுக்கும் உணர்வுடன் இருக்கும் ஞானமுள்ள பொருட்களுக்கும் நீயே நாயகன். முக்காலங்களுக்கும் நீயே நிர்வாகன். கடல் சூழ்ந்த இந்த உலகிற்கும் நீயே ப்ரதானமானவன். யாகங்களில் காணப்படும் மூன்று தீயினிற்க்கும் அதிபதி நீயே. ஆயர் குலதில் உதித்த மாயனே, உன்னை ஞானம் கொடுக்கும் அந்த முக்கண்ணனாலும் துதிக்க முடியாது.”
விளக்கம்
எம்பெருமான் ஆழ்வாரிடம் “நான் இவ்வளவு செளலப்யமாக, அணுக எளிதாக இருக்கிறேனே, அதை மீறியும் என் தன்மைகளை அறிய முடியவில்லையென்றால், அது பக்தனின் குறை தானே? அப்படியிருக்க, நீ எப்படி “உன்னை யாரால் அறியமுடியும்?” என்று பாடினாய்?” என்று கேட்டதால் விளைந்த பாடல் இது!
ஒன்றிரண்டு மூர்த்தியா: முதற்கடவுள் நீயே. பிரம்மா, சிவன் இருவருக்குள்ளும் நீயே இருந்து படைத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை நடத்துகிறாய்.
உறக்கமோடு உணர்ச்சியாய்: “ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழில்லை” என்று ஒரு கூற்று உண்டு. அந்த ரீதியில் இங்கே “உறக்கம்” என்பது ஞானமில்லா எல்லா பொருட்களையும் குறிக்கும். மற்ற ஞானமுள்ள, உணர்ச்சிமிக்க பொருட்ககளையும் சேர்த்து அனைதிற்கும் நீயே தலைவன்.
ஒன்றிரண்டு காலமாகி: ஒன்று + இரண்டு = மூன்று என்ற கணக்கின்படி, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று முக்காலதிற்கும் அதிபதி நீயே.
வேலைஞால மாயினாய்: (வேலை = கடல்). கடல் சூழ்ந்த இந்த பாரத தேசத்திற்கு நீயே நாயகன்.
ஒன்றிரண்டு தீயுமாகி: ஒன்று + இரண்டு = மூன்று என்ற கணக்கின்படி, ஆஹ்வ்நீயம், கார்ஹபத்யம் & தஷிணாக்னி என்னும் மூன்று தீயுமாகி இருப்பவன் நீயே.
ஆயனாய மாயனே: மாடு மேய்க்கும் குலதில் உதித்த மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானும்: ஒன்று + இரண்டு = மூன்று கண்களை உடைய சிவபெருமான்தான் அனைவர்க்கும் ஞானமளிக்கிறான்.
உன்னை ஏத்த வல்லனே: மத்ஸ்ய புராணம், “ஞானம் மஹேச்வராத் இச்சேத் , மோக்ஷமிச்சேத் ஜனார்தநாத்” என்று கூறுகிறது. நான்முகன் திருவந்தாதியில் “ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன்” என்று கூறப்பட்டபடி சிவபெருமான் எம்பெருமானே முதற்கடவுள் என்று அனைவர்க்கும் போதிக்கிறான். ஆனலும் அவனாலும் உன்னை துதி பாட முடியாது.

