ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
ஆதியான வானவர்க்கு
மண்டமாய வப்புறத்து,
ஆதியான வானவர்க்கு
மாதியான வாதிநீ,
ஆதியான வானவாண
ரந்தகாலம் நீயுரைத்தி,
ஆதியான காலநின்னை
யாவர்காண வல்லரே? 8
பொருள்
“நீ துவக்கி வைத்த லீலா விபூதியில் இருக்கும் பிரமன், இந்திரன், ருத்திரன் முதலியவர்களுக்கும், அதைத் தாண்டி, நித்யவிபூதியில் உறையும் நித்தியசூரிகளுக்கும் நீயே காரணகர்தா. அவர்களனைவர்க்கும் உள்ள அந்திமகாலத்தை குறிப்பவனும் நீதான். தொடக்கம் முதல் காலத்தையே ஆளும் உன்னை, ருத்திரன் மட்டுமில்லை, யாராலும் அறிய முடியாது.”
விளக்கம்
போன பாசுரதில் ருத்திரனால் உன்னை அறிய முடியாது என்று கூறிய ஆழ்வார், இந்த பாசுரதில், அவன் மட்டுமில்லை, நித்ய – லீலா விபூதிகளில் உள்ள யாராலும் எம்பெருமானை அறிய முடியாது என்கிறார்.
ஆதியான வானவர்க்கு: பிரம்மா, தக்ஷப்ரஜாபதிகள், ஸப்தரிஷிகள், 12 ஆதித்யர்கள் ஆகிய இவர்கள் ஸ்ருஷ்டிகர்த்தாக்கள்; இந்திரன், சதுர்த்தச மநுக்கள் ஆகிற இவர்கள் ஸ்திதிகர்த்தாக்கள்; ருத்ரன், அக்நி, யமன் முதலானவிவர்கள் ஸம்ஹாரகர்த்தாக்கள். இவர்களனைவரையும் சேர்த்து, “ஆதியான வானவர்” என்று கூறுகிறார் ஆழ்வார். இவர்களுக்கு லீலாவிபூதியிலிருந்து தொடக்கம் உள்ளது.
அண்டமாய அப்புறத்து ஆதியான வானவர்க்கு: பரமபதம் லீலாவிபூதியை தாண்டி நித்யவிபூதியில் இருக்கிறது. அதில் உள்ள நித்யசூரிக்ளை குறிக்கிறார் அழ்வார் இந்த அடியில். விஷ்ணு புராணத்தில், ஶ்ரீ கௌஸ்துபத்தை நிரந்தரமான ஜீவாத்மாக்களின் குறியீடாகவும், ஶ்ரீ வத்ஸம் நிலையில்லா ப்ரக்ருதியின் அடையாளமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஆதியான ஆதி நீ: மேலே கூறியிருக்கும் அனைதிற்க்கும் ஆதிமூலம் பெருமாள் தான்.
ஆதியான வானவாணர் அந்தகாலம் நீயுரைத்தி: தொடக்கம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்றும் ஒன்று இருக்க வேண்டும். அந்த முடிவை பிரம்மாதி தேவர்களுக்கு குறிப்பவனும் நாராயணணே.
ஆதியான காலம் நின்னை: ஷ்ருஷ்டியில் தொடங்கி, ஊழியில் முடியும் காலமும் எம்பெருமாளே. நாராயணன் ஊழியையும் தாண்டி இருக்கிறான்.
யாவர்காண வல்லரே: எல்லாமே அவன் ஷ்ருஷ்ட்டித்தது. இப்படியிருக்க, ருத்திரன் என்ன, அதில் உள்ள யாராலும் அவனை எப்படி அறிய முடியும்?


ப்ரக்ருதி ஜீவன் இரண்டுக்குமே அழிவு இல்லை. ப்ரக்ருதி உருமாறக்கூடியது. ஜீவன் ப்ரக்ருதி சம்பந்தத்தை கூடிய சரீரம் பெரும் போது அந்த மாறும் சரீரத்தில் மாறாமல் இருப்பது. இந்த இரண்டின் சமஷ்டிகளும், ப்ரக்ருதி சமஷ்டி ஜீவ சமஷ்டிகளும் மஹா ப்ரளயத்தில் ஒடுக்குவது பரப்ரம்மத்தில். மஹாப்ரளயம் முடிந்து ச்ருஷ்டி துவங்கும்போது ப்யத்யக்ஷமாகின்றன. இதை உணர்த்தவே யசோதா மற்றும் ரிஷ்யசிங்கரின் அனுபவங்கள்.
ப்ரக்ருதி நிலையில்லாதது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டிருக்காது என்றே தோன்றுகிறது. சதா சர்வ காலமும் மாறுதலுக்கு உட்பட்டது என்ற பொருளில் கூறப்பட்டிருக்கும். அதை நிலையற்றது என்று பொருள்படுத்தும்போது அது அழியக் கூடியது என்று தோன்றுவதை தவிர்க்கலாம்.