திருச்சந்த விருத்தம் 10/761: தன்னுளே திரைத்துஎழும்
இவ்வுலகம் உன்னிடமே எழுந்து அடங்குகிறது
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
தன்னுளேதி ரைத்தெழும்
தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந்
தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து
நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற
நீர்மைநின் கண் நின்றதே. 10
பொருள்
“ நீண்ட பெருங்கடலில் வெண்மையான அலைகள் திரண்டு எழுந்து மறுபடியும் அதனுள்ளேயே அடங்குகின்றன. அதேபோல், நிற்கும், அசையும் உயிர்களெல்லாம் உன்னுள்ளே பிறந்து, உன்னுள்ளேயே அடங்குகின்றன. இந்த இயல்பு உன்னிடம் மட்டுமே உள்ளது.”
விளக்கம்
முந்தைய பாசுரதில் ஆழ்வார் எம்பெருமானே அனைவருக்கும் தஞ்சம் என்றார். இந்த பாசுரதில், அவர், பெருமாளே உபாதன காரணம் என்று ஒரு ஒப்புமை மூலம் கூறுகிறார்.
( உபாதன காரணம் என்றால், ஒன்றை தேவையான மூலப்பொருள் என்று அர்த்தம். நிமித்த காரணம் என்றால் உருவாக்க தேவையான கருவி).”
தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங் கடல்: நீண்ட பெருங்கடலில் வெண்ணிறமான அலைகள் கொதித்தெழுகின்றன. இந்த அலைகள், கடலில் உள்ள நீர்த்துளிகளாலேயே உருவாகின்றன. அவை கடலின் மேல் உலாவும்போதும் அதே நீர்த்ளிகளை கொண்டே அலைகின்றன
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மை போல்: அலைகள் அடங்கும் போதும், அந்த கடலின்னுள்ளே அதே நீருக்குள் அடங்குகின்றன.
காற்று இல்லையென்றால், கடல் சலனமில்லாமலிருக்கும். ஆனால் காற்று தொடங்கியதும், அலைகளும் தோன்றுகின்றன. இந்தக் கடலை பெருமானுக்கும், காற்றை அவனின் சங்கல்பத்திற்க்கும் ஒப்பிடுகிறார் ஆழ்வார்.
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற: கடலலைகளைப் போலவே, நிற்கும், அசையும் உயிர்களும், சேதன, அசேதன பொருட்களும், எல்லாம் பெருமளிடமிருந்தே தோன்றுகின்றன. பின்னர், அவனுள்ளேயே அடங்கியும் விடுகின்றன. அவை தோன்றவும் மறையவும் அவன் சங்கல்பமே காரணம்.
இதற்கு சாந்தோக்கிய உபனிஷத்தில் “நீ மண்ணை அறிந்தால், மண்ணால் செய்யப்படும் பானை, மூடி, போன்ற அனைத்தயும் அறிவாய்” (“யதா ஸோம்யைகேந ம்ருʼத்பிண்டேந ஸர்வம் ம்ருந்மயம் விஜ்ஞாத ஸ்யாத்”) வாக்கியமே ப்ரமாணம்.
நீர்மை நின்கண் நின்றதே: இந்த உபாதன காரண தன்மை உன்னிடம் மட்டுமே உள்ளது.

