திருச்சந்த விருத்தம் 9/760: தாதுலாவு கொன்றைமாலை
யாவரும் வணங்கும் தன்மை உன்னிடம் உள்ளது
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
தாதுலாவு கொன்றைமாலை
துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால்வ ணங்குபாத
நின்மலா!நீ லாயசீர்,
வேதவாணர் கீதவேள்வி
நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே. 9
பொருள்
“கொன்றை மாலை அணிந்து, செம்மையான சடையை உடைய சிவனும், வேதங்களை கற்று, அவற்றை வணங்கி, நெறி வழுவாமல் சாமகானம் பாடி உன் பாதங்களை தொழ மட்டுமே வாழும் அடியார்களும் உன்னையே வணங்குகின்றனர். இப்படி, சிவனைப்போல் இகலோக சுகங்களை விரும்புவர்களும், வேத விற்பண்ணர்கள் போல் பரலோக சுகங்களை விரும்புவர்களும் போற்றும் தன்மை உன்னிடம் மட்டுமே உள்ளது.”
விளக்கம்
திருமங்கைப் பிரான் எம்பெருமான் மட்டுமே எல்லோரும் போற்ற தகுந்தவன் என்று இந்த பாசுரத்தில் கூறுகிறார்.
தாதுலாவு கொன்றைமாலை துன்னு செஞ்சடைச் சிவன்: மகரந்த தாள்கள் (தாது) நிறைந்த கொன்றைபூ மாலை அணிந்தவன் சிவன். தினம் குளிப்பதால் அவன் கேசம் செம்பட்டை படிந்து இருக்கிறது. அது அடர்ந்து (துன்னு) சடை படர்ந்து இருப்பதால், அவன் தவம் மிகச் செய்கிறான் என்பதும் தெளிவாகிறது. இவை அனைத்தயும் சேர்த்து நோக்கினால், பெருமாளை மட்டும் நாடாமல், வேறு இகலோக சுகங்களையும் நாடுகிறான் என்று புலப்படுகிறது.
நீதியால் வணங்கு பாத நின்மலா: வேதங்கள் கூறியபடி வணங்கத்தக்க பாதங்களை உடைய குறையில்லாதவனே
நிலாயசீர், வேதவாணர் கீதவேள்வி: ஞான யோகம் பழக, கிதையில் கண்ணன் வினயம், வாய்மை, நேர்மை போன்ற ஆத்ம குணங்கள் தேவை என்கிறான். இந்த குணங்கள் அழியாமல் பொருந்தி இருக்கும் வேதம் கற்று அறிந்த ஞானிகள், அவர்கள் பாடும் சாமகானம் ...
நீதியான கேள்வியார்: வேதங்களை கேட்டு அதை நன்கு அறிந்த ஞானியர், யாகங்கள் செய்யும் போது, “இந்த யாகம் நான் செய்வது இல்லை. இது என் கர்மம் இல்லை. இதன் பலன் எனக்கு சேராது” என்ற எண்ணத்தில் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களே வேதம் கூறியபடி யாகம் செய்பவர்கள்.
நீதியால் வணங்குகின்ற: ப்ருஹதாரண்யக உபனிஷத் கூறுவது: “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஃ, ஷ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்யோ ('आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः')”. இது, "ஆத்மாவைத்தான் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும், தியானிக்க வேண்டும்" என்று மைத்ரேயிக்கு யாக்ஞவல்கியர் கூறும் உபதேசமாகும். இங்கே, “ஆத்மா” என்பது, பரமாத்மாவை குறிக்கும். அப்படி பரலோக சுகங்களை மட்டுமே விரும்புவர்களே “வேதவாணர்” எனப்படுவர்.
நீர்மை நின்கண் நின்றதே:அப்படி, இகலோக சுகங்களை விரும்புவர்களும், பரலோக சுகங்களை விரும்புவர்களும், எல்லோராலும் போற்றி வணங்கப்படும் குணம் உன்னிடம் மட்டுமே இருக்கிறது.
(ஆழ்வார் கூறியதை அப்படியே இங்கே தந்துள்ளேன். மற்றபடி, சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா என்று விவாதிக்கும் அருகதை எனக்கு இல்லை.)


Well written ending with a disclaimer aptly!