திருச்சந்த விருத்தம் 13/764: இன்னையென்று சொல்லலாவ
உன் அருளினாலேயே உன்னை அறிய முடியும்
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
இன்னையென்று சொல்லலாவ
தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி
ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு
பேருமூரு மாதியும்,
நின்னையார் நினைக்கவல்லர்
நீர்மையால்நி னைக்கிலே! 13
பொருள்
“உன்னை “இதுதான் நீ” என்று வகைப்படுத்த முடியாது. கற்று அறிந்த பெரியோர், உன்னை அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் உள்ள முரண்பாட்டை உணர்ந்தவர்கள். உன்னை அறிந்தவர்கள், நீயே எல்லாம் என்பர். அறியாதவர்களோ, நீயே இல்லை என்பார்கள். இதனால், உன்னை அறிய, உன்னை அறிந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. (இது, கணிம இயலில் கூறப்படும் “recursion”!) ஆகவே, உன் அவதாரங்களையும், வேதங்கள் உரைக்கும் உன் பெருமைகளையும் அறிந்த கற்ற பெரியோர், உன் எளிமையான அவதாரத்திடம் தஞ்சமடைவதே சிறந்தது என்று, “இவன் சிற்றிடை கொண்ட இடைப்பெண் நப்பினையின் நாயகனாய் கிருஷ்ணனாய் இருக்கும் ரூபத்தை சரணம் அடையுங்கள்” என்பார்கள். ஏனெனில், உன் அவதார உருவங்களில் உனக்கு மற்றவர்கள் இணைபோல் தோன்றினாலும், உன் திவ்ய சொரூபத்திற்கோ, உன் திவ்ய தேசங்களுக்கோ, உன் திவ்ய நாமங்களுக்கோ இணை ஏது? ஆதிமூலமாகிய நீ, உன் பரத்துவத்தால் அனைத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கிறாய். அதனால், அவர்கள் உன்னை பற்றி அறிவது கூட உன் அருளால்தான் முடியும் என்று தெரிந்தவர்கள். எனவே, சுய முயற்சியால் உன்னை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. உன் அருளிருந்தால் மட்டுமே உன்னை சிறிதேனும் உணர முடியும்.”
விளக்கம்
பெருமாள் ஆழ்வாரிடம், “எனது பல்வேறு சக்திகளையும், மாயங்களையும் யாராலும் அறியமுடியாது என்றால், உலகினருக்கு அவைபற்றி எப்படி தெரிந்தது?” என்று கேட்டார். அதற்கு இந்த பாசுரத்தில் ஆழ்வார் பதிலளித்தது: “உன் அவதாரங்களினாலும், இடையனாக நீ வந்த சௌலப்யத்தினாலேயும் உன்னை அறிய முடியாது. உன் அருள் இருந்தால் மட்டுமே சில மேலோர், சிற்சில சக்திகளையும், மாயங்களையும் அறிந்து கொள்ள முடியும். சுய முயற்சியால் உன்னை சிறிதுகூட அறிய முடியாது.”
இன்னை ஏன்று சொல்லல் ஆவது இல்லை: உன் அவதாரங்களின் தன்மைகளைக் கண்டு, ‘நீ சௌசீல்யமானவன்; நீ சௌலப்பியமானவன்; நீ வாத்சல்யன்” யாரும் நினைத்தால், அது உன்னை முழுமையாக உன்னை அறிந்ததாகாது. அப்படி உன்னை “இன்னான்” என்று வகைப் படுத்தவும் முடியாது.
யாதும் இட்டி இடைப் பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்குணர்ந்த பெற்றியோர்: (இட்டி = மெல்லிய; பின்னை =நப்பினை பிராட்டி; பெற்றி=பெருமை; பெற்றியோர் = பெரியோர்).
புருஷ ஷூக்தம் “பரமபுருஷனுக்கு பிறப்பில்லை என்றாலும், அவன் பலவிதமாக அவதாரம் எடுக்கிறான். இதை கற்றவர்கள் மட்டுமே அறிவார்கள்.” (“அஜாயமானோ பஹுதா விஜயாதே தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம்”) என்று கூறுகிறது.
அந்த மேலோர்களுக்கு, உன்னை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் உள்ள முரண்பாடும் தெரியும். திருவாய்மொழி 1-3-4 “பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்; பேரும் ஓர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே” என்று கூறுகிறது. இதன் பொருள் “உன்னை அறிந்தவர்கள், உன் பெயர்களுக்கும் உருவங்களுக்கும் அளவே இல்லை என்பர். உன்னை அறியாதவர்களோ, உனக்கு பெயருமில்லை உருவமில்லை, நீயே இல்லை என்பார்.”
உன்னை அறிந்தால்தான் உன்னை அறிய முடியும் என்பது இதனால் தெளிவாகிறது.
எனவே, உன்னை அறிய வேண்டுமென்றால், உன் கருணையினால் மட்டுமே அது முடியும். ஆகையால், வேதங்கள் கூறும் உன் பெருமைகளை அறிந்த சான்றோர்கூட, நீ எளிமையாக இடைக்குலத்தில் நப்பினையோடு அவளின் நாயகனாக இருக்கும் உருவிலேயே உன்னை சரணடைகிறார்கள்.
பின்னையாய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்: நீ அவ்வப்போது அவதாரம் எடுக்கும்போது, அவதார நோக்கத்திற்காக மற்றவர்களை போல் நீ இருந்தாலும், உன் பரத்த்வம் மறைவதேயில்லை. சங்கர்ஷணன், அனிருத்தன் போன்ற உன் திவ்ய நாமங்களும், ஆமோதம், பிரமோதம் போன்ற திவ்ய ஊர்களும் எப்போழுதும் உன் பரமபுருஷ தன்மையையே குறிக்கின்றன.
நின்னை யார் நினைக்கவல்லர் நீர்மையால் நினைக்கிலே: இந்த அடியை, “நீர்மையால் நினைக்கில் (அல்லது) யார் நினைக்கவல்லரே” என்று மாற்றியமைத்தால், பொருள் விளங்கும். உன் அருள் இல்லையேல், யாரால் உன்னை அறிய முடியும்?

