திருச்சந்த விருத்தம் 16/767: தலைக்கணத்து கள்குழம்பு
நின் பெருமை மலைகளினும் மலைக்க வைக்கும்
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
தலைக்கணத்து கள்குழம்பு
சாதிசோதி தோற்றமாய்,
நிலைக்கணங்கள் காணவந்து
நிற்றியேலும் நீடிருங்,
கலைக்கணங்கள் சொற்பொருள்க
ருத்தினால்நி னைக்கொணா,
மலைக்கணங்கள் போலுணர்த்தும்
மாட்சிந்ன்றன் மாட்சியே. 16
பொருள்
“நீ எல்லா உயிரினங்களும் (தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், மரங்கள் போன்று) உன்னை தங்களைப் போலவே அனுபவிக்க பல விதங்களிலும் அவதரிக்கிராய். ஆனால், முடிவில்லா மலைத் தொடர்களை ஏற முற்படுபவனைப் திகைப்பதைப் போன்று வேதங்களும் உன் மகிமையை முழுமையாக விளக்க முயன்று தோற்கின்றன.”
விளக்கம்
பெருமாள் எல்லா ஜீவன்களும் அவனை அனுபவிக்க பல அவதாரங்கள் எடுப்பது அவனது செளலப்யத்தினால். அதனால் அவனை புரிந்து கொள்வது எளிது என்று நினைப்பது மடமை என்கிறார் ஆழ்வார் இந்த பாசுரதில்.
தலைக்கணத் துகள் குழம்பு சாதி: ஒரு ஆத்மாவின் கர்மவினையைப் பொருத்து அதன் அடுத்த பிறப்பின் நிலை வகுக்கப்படுகிறது. நல்வினை மட்டுமே செய்திருந்தால், அது தேவர்களிளுள் பிறக்கும். இங்கே, “துகள்” என்பது, “மாசு” அல்லது “குற்றம்” அல்லது “தீமை” என்ற அர்தத்தில் பயன் படுத்தப்படுகிறது. மாசு அதிகரிக்க அதிகரிக்க, அறிவு குறைகிறது. தீவினை மட்டுமே செய்திருந்தால், அந்த ஆத்மா மரமாக பிறக்கும். நில்வினை, தீவினை இரண்டும் செய்திருந்தால், மனிதனாகவோ மிருகமாகவோ பிறக்கும்.
தேவர்கள் தலை கணங்கள். மனிதர்களும் விலங்குகளும் குழம்பு சாதி. நிலைக் கணங்கள் என்றால் அசைவில்லா மரஞ்செடிகொடிகள்.
சோதி தோற்றமாய்: ஜோதி வடிவான எம்பெருமான், மேலே சொன்ன நான்கு உயிரினங்களாக அவதரிக்கிறான். தேவர்களுள் வாமனாகவும், கல்கியாகவும், மனிதர்களுள் இராமனாகவும், கண்ணனாகவும், விலங்கினங்களில் மீனாகவும், ஆமையாகவும் அவதரிக்கிறான்.
நிலைக்கணங்கள் காணவந்து நிற்றியேலும்: மரங்களுக்குள் அவன் குப்ஜாமரமாக (குட்டை மாமரம்) அவதரிக்கிறான். இது, அறிவில்லாத, நகர முடியாத மரங்களும் அவனை அனுபவிக்க ஹேதுவாக இருக்க வேண்டும் என்று இப்படி தோன்றினான். (இது பற்றி வேறு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.)
நீடிருங் கலைக் கணங்கள்: அந்தமில்லா வேதங்களும் வேதாங்கங்களும் ...
சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா மலைக்கணங்கள் போல் உணர்த்தும்
மாட்சி நின்றன் மாட்சியே: பெருமாளின் பெருமைகளை பாடவே தோன்றியுள்ள வேதங்களும், வேதாங்களும், சொற்களாலும், அவற்றின் பொருளாலும், அவை உணர்த்தும் கருத்துக்களாலும் பகவானின் மகிமையை கூற முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. ஒரு முடிவில்லா மலைத்தொடரை ஏற முயல்பவன் அந்த பணியின் பிரம்மாண்டத்தை நினைத்து தொடக்கத்திலேயே மலைத்துப் போவான். அது போன்றே, வேதங்களும் இறைவனின் மாட்சியின் முன் அவனை விளக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன.


Maybe your query about karma dispensed by Achits in another context gets some clarity now?