திருச்சந்த விருத்தம் 19/770: புள்ளதாகி வேதநான்கு
பாம்பையும் பறவையையும் சேர்த்து வைக்கிறாய்
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
புள்ளதாகி வேதநான்கு
மோதினாய்அ தன்றியும்,
புள்ளின்வாய்பி ளந்து புட்கொ
டிப்பிடித்த பின்னரும்,
புள்ளையூர்தி யாதலால
தென்கொல்மின்கொள் நேமியாய்,
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி
டத்தல்காத லித்ததே. 19
பொருள்
“அன்று அன்னப் பறவையாக வந்து வேதங்களை பிரமனுக்கும் சனகாதி ரிஷிகளுக்கும் ஓதினாய். கொக்காக வந்த பகாசுரனை அவன் வாயை பிளந்து கொன்றாய். கருடனை கொடியாகவும் வாகனமாகவும் வைத்திருக்கிறாய். ஆனலும், சுடர்விடும் சக்ராயுதத்தை தாங்கும் தலைவனே, அந்த கருடப் பறவையின் பகைவனான ஆதிசேஷன் மீது இவ்வளவு ஆசையுடன் படுத்துக் கிடப்பதும் ஏனோ?”
விளக்கம்
“அனைத்தையும் காக்கும் எம்பெருமான் குல எதிரிகளான கருடனையும் ஆதிசேஷனையும் ஒருசேர இணைத்திருப்பதில் என்ன அதிசயம் என்று கேட்கிறார் ஆழ்வார். இந்த பாசுரத்தை சற்று மாற்றி படித்தால் இன்னும் சற்று எளிதாகப் புரியும் என்கிறார் வியாக்யாதா பெரிய வாச்சான் பிள்ளை:
“மின்கொள் நேமியாய் புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய்; அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும், புள்ளை ஊர்தி; புள்ளின் மெய்ப்பகைக் கடல்கிடத்தல் காதலித்தது அது என் கொல்”
பெருமாளுக்கும் பறவை இனத்திற்கும் ஆழமான சம்பந்தம் இருக்கிறது.
புள் அது ஆகி வேதம் நான்கும் ஓதினாய்: மகாவிஷ்ணு அன்ன வடிவம் கொண்டு பிரம்மனுக்கும் சனகாதி ரிஷிகளுக்கு வேதங்களை உபதேசித்த கதையே ஹம்ச அவதாரக் கதையாகும். அவர் நேரடியாக பரமாத்மாவாக அதைச் செய்திருந்தால், அவரே சொல்வதாக இருப்பதைப்போலிருக்கும் என்பதால் அன்னஅவதாரம் எடுத்தார். வேதங்கள் அபுருஷேயம் (யாராலும் எழுதப்படாதவை) என்பது இங்கே கவனிக்க தக்கது.
(புள்= பறவை. கருடன் பறவைகளின் அரசன்)
அதன்றியும்: அதைத்தவிர ...
புள்ளின் வாய் பிளந்து: கிருஷ்ணாவதாரத்தில் பகாசுரன் என்ற கொக்கை வாயைப் பிளந்து கொன்றார்
புள் கொடிப் பிடித்த பின்னரும், புள்ளை ஊர்தி ஆதலால்: ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன் அருகே வந்து தஞ்சமடையும்படி அறிவிக்கும் கருடக் கொடியை தாங்கியிருக்கிறான். அந்த பெரிய திருவடியையே வாகனமாகவும் கொண்டிருக்கிறான். ஆபத்து வந்தால் அன்று கஜேந்திரனை கருடனமேல் விரைந்தோடி வந்து இரட்சித்ததுபோல் உடனே காத்தருள்வேன் என்று பெருமாள் உணர்த்துகிறான்.
என் கொல்: ஏனோ என்று பொருள்பட வருமிதை, இதை கடைசியில் சேர்த்துப் படிக்க வேண்டும்.
மின் கொள் நேமியாய்: சுடர்விட்டு, தீப்பிழம்பாய் ஒளிரும் ஸுதர்ஸன சக்கரத்தை எப்பொழுதும் தாங்கியிருக்கும் ...
புள்ளின் மெய்ப் பகைக்: கருடனின் பகையான பாம்பு (திரு அனந்தாழ்வான்)
கடல் கிடத்தல் காதலித்ததே (என் கொல்): திருபாற்கடலில் ஆதிசேஷனின்மேல் படுக்க இத்தனை விருப்பபடுவதேன், எம்பெருமானே?
இந்தப் பாசுரத்தில், சேரா பொருட்களை அனாயாசமாக சேர்க்கிறான் பெருமான்.
அதுபோலவே, அஹங்கார (உடலே ப்ரதானம்), மமகாரமுடைய (நானே ப்ர்தானம்) நம்போன்ற ஜீவாத்மாக்களை, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வது மட்டுமே குறிக்கோளாய் இருக்கும் நித்தியசூரிகளுடன் சேர்த்து மோக்ஷமளிப்பான் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

